Pitas.com!

Kasi's voice blogs in Coimbatore Dialect of Tamil

K's மடல்
e-சுவடி
india.com

வாங்க, வாங்க!
நல்லாருக்கிறீங்களா? நான் ஒரு சோதனை பண்ணீட்டு இருக்கறங்க. இங்க நம்ம கோயமுத்தூரு ஜில்லாவிலெ கிராமத்துப்பக்கம் எப்பிடிப்பேசுவமோ அப்பிடி கொஞ்சம் பேசி, அதய உங்குளுக்குக் காட்டரதுக்காக வெச்சிருக்கறங்க. கேட்டுப்பாருங்க.

கிழே இருக்கர ஒவ்வொரு தலைப்பையும் உங்க mouseனால சுட்டினீங்கன்னா நீங்க என் கொரலக் கேக்கலாம்ங்க.

இது மாதிரி நெறய கொரல் சேர்த்து பெரிய அளவுல பண்ணரதுக்கு நம்ம கண்ணன் அவுங்க ஒரு முயற்சி எடுத்துருக்கறாங்க. நீங்க இந்த எடத்துக்குப் போயிப் பாத்தீங்கன்னா மேற்கொண்டு விவரம் கெடைக்குங்க.

நீங்க இங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம்ங்க.

-காசி

விடுகதை - 2
காலே அரைக்காப் பணத்துக்கு நாலே அரைக்காப் பழமுன்னா, பணத்துக்கு எத்தனை பழம்?

விடுகதை - 1
காயும் கோணக்காய் கொள்ளடா மைத்துனா, கதையும் விடுவித்தேன் சொல்லடா மைத்துனா.

பழமொழி - 2
நாயிக்கு செய்ய வேலையில்லே நிக்க நேரமில்லே

பழமொழி - 1
வாய் படிச்ச நாய் வேட்டைக்கு ஆகாது

குறுங்கதை - 2
ஒரு மருமகன் மாமியா ஊட்டுக்குத்தனியாப் போகவேண்டிவந்துது. மாப்ளெ வந்திருக்கறார்னு மாமியாளும் நல்லதா செஞ்சு பொடுவம்னு கொளக்கட்டை செஞ்சு போட்டுது. மாப்பளை ஒரு மசத்தருமன், பாவம், கொளக்கட்டையவா கண்டிருக்கறான்? மாப்ளைக்கு கொளக்கட்டை நம்பப்புடிச்சிருச்சு. சும்மா பத்து இருவது கொளக்கட்டையத் தின்னுட்டு, 'அத்தே இது என்ன பலகாரம்? உங்க மக பண்ணறதே இல்லியே'ன்னானாம்.

'இதுங்களா மாப்ளே, இது கொளக்கட்டையாச்சே, எம் மகளுக்குத் தெரியுமே'ன்னாளாம்.

'எங்கெ இதெல்லா அந்தக்களுத செய்யுது, புட்டுச்சுடரதே ஆடிக்கொருக்கா, அம்மாசைக்கொருக்கா. நாம்போயி இதச் செய்யச் சொல்லப் போரேன்'ன்னுட்டுக் கெளம்புனான்.

ஊட்டுக்கு வர்ர தடம்பூரா பேரு மறந்துபோயிரும்னு 'கொளக்காட்டே, கொளக்கட்டே'ன்னு சொல்லிட்டெ வந்தானாம். ஒரு எடத்துலே வாய்க்கால் ஒண்ணு குறுக்க வர அதத் தாண்டிக்குதிக்கறப்போ 'அத்திரிபச்சா'ன்னு சத்தம்போட்டுட்டுக் குதிச்சானாம். அதுக்கப்புறம் 'கொளக்காட்டே, கொளக்கட்டே'ங்கறது போயி 'அத்திரிபச்சா, அத்திரிபச்சா'ன்னு சொல்லிட்டே வந்தான்.

ஊட்டுக்கு வந்தான். விசாரிப்பெல்லாம் ஆச்சு. 'ஏனுங், மாப்பளைக்கு எங்கம்மா என்ன பண்ணிப்போட்டாங்க?'ன்னு கேக்க, நம்மாளு, 'அத்திரிபச்சா பண்ணிப்போட்டுச்சே உங்கொம்மா, நீ ஒரு நாளாச்சும் பண்ணிப் போட்டயா'ன்னான்.

'அதென்னங்கது அத்திரிபச்சா?'

'உனக்கா தெரியாது, உனக்கு என்னக்கண்டாலே எளக்காரம், அதுதேன் பண்ணிப்போடுலை'

'அய்யோ, சாமி சத்தியமா எனக்கு அத்திரிபச்சான்னா என்னன்னே தெரியாதுங்கோ'ன்னு அழுக,

'மறுக்கா பொய்யா சொல்ரே, களுதே'ன்னு புடிச்சு அடி அடின்னு அடிச்சுப்போட்டான் மசையன்.

அவளும் அளுகறா, பெரள்றா, ம்ஹூம், ஒண்ணும் கேட்ட பாடில்லை. 'அத்திரிபச்சா பண்ணதெரியலேன்னா நீ உங்கொப்பனூட்டுக்கே போயிரு'ன்னு அடிச்ச அடியில கன்னமெல்லாம் வீங்கிப்போச்சு.

பக்கத்து ஊட்டுக்கார்ரெல்லாம் வந்துட்டாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க, இவன் கதையெல்லாம் சொன்னான். 'அட அவ தான் தெரியாதுங் கறாளே, அதுக்குப்போயி இப்பிடி அடிச்சுப்பொட்டயே. பாரு கன்னமெல்லாம் கொளக்கட்டையாட்ட வீங்கீருக்குது'ன்னு சொல்லவும், இவன் குதிச்சானமா. 'அதேதேன், அதேதேன், கொளக்கட்டையேதேன், அதுதேன் செய்யச்சொன்னேன்'.

குறுங்கதை - 1
ஒரு காட்டுப்பண்ணாடி, ஒரு வேலையாளு. இந்த வேலையாளுக்கு காட்டுலெ இருந்த தென்ன மரத்து மேல ஒரு கண்ணு. ஒரு நாளாவது அதுலிருந்து எளநி பறிச்சுக் குடிக்கணும்னு. ஆனா அதுக்கு நேரமே வல்லெ.

ஒரு நாளு 'டேய், நான் சந்தைக்குப் போயிட்டு வாரேன். இந்த கண்ணுக்குட்டிக்கு புல்லுப் புடிங்கிப்பொட்டுட்டு பத்திரமா இரு' ன்னுட்டுப் போய்ட்டாரு.

இவம்பாத்தான். 'செரி இன்னிக்கி நம்முளுக்கு நல்ல நேரம்'னுட்டு, பண்ணாடி போய்ட்டாருன்னு தெரிஞ்சுட்டு சரசரன்னு தென்ன மரத்துமேலே ஏறிட்டான். நல்லதா ஒரு எளநி மேலே கை வைக்கவும், வண்டிச்சத்தம் கேக்கவும்! எதையோ மறந்துபோன பண்ணாடி திரும்பி வந்துட்டாரு!

இவன் மறுக்கா சரசரன்னு கீழே எறங்கவும், அதுக்குள்ளே அவர் வந்தே வந்துட்டார்.

'ஆர்ராது தென்ன மரத்து மேலே?'

'நாந்தேனுங் சாமீ'

'அங்கென்னடா பண்ரே?'

'கண்ணுக்குட்டிக்குப் பில்லுப் புடுங்கறனுங் சாமீ'

'தென்ன மரத்து மேலே ஏதுரா பில்லு?'

'அதுகண்டு தேனுங் எறங்கரனுங் சாமீ' ன்னானாம்.

உரையாடல் - 1
கண்ணூ! ஊர்லிர்ந்து எப்ப வந்தீங்க? ஊர்ல அல்லாரு(ம்) நல்லா இருக்கராங்களா? ஆரெல்லா(ம்) வந்தீங்க? ஐயனம்மா அல்லா(ம்) எப்டி இருக்கறாங்க? சின்னம்ச்சி ஊருக்கு வாரதுக்கு இன்னிக்குத்தே(ன்) தடம் தெரிஞ்சுதா?

ஏஞ்சாமி, பள்ளிக்கொடம் போறயா? உம்பேரு வேர எனக்கு சட்னு வர மாட்டீங்குது... ஆ..ங்.. சதீசு. எத்தனாவது படிக்கிறே? நல்லாப்படிச்சு, உங்கொப்பனாட்ட(ம்) பெரிய வேலைக்குப்போகோணு(ம்). உங்கப்ப(ன்), பத்தாவது படிக்கீலே இந்த ஆத்தா ஊட்டுலதே(ன்) இருந்தா(ன்). மக(ன்), சாமைச்சோறு ஆக்கிக்குடுத்தாலு(ம்), டிப்பன் பாக்ஸ்ல போட்டுட்டு, ஏள்ரை மணிக்கு பொள்ளாச்சி பஸ்ஸுலே போனா, பொளுதோட தான் வருவா(ன்). நெல்லஞ்சோறு தே(ன்) வேணும்னு ஒரு நாளு கேக்கமாட்டா(ன்). பத்தாவது படிக்கையிலேயே உஞ்சோடு தா(ன்) இருப்பா(ன்).

டே(ய்) தெண்டவாணீ, அந்தக் கோளிக்குஞ்ச அடிச்சு ஒரம்பரைக்கு கொளம்பு வைக்கச்சொல்லு. உம்பொண்டாட்டி என்ன பண்ரா?. மொதல்ல பொரி வறுத்துக் காப்பி வைக்கச்சொல்லு... இந்தா பணம், போயி மயிலேசு கடையிலே, என்ன வேணுமோ அத வாங்கீட்டு வா.

விகடன்
தினமலர்
The Hindu